திருநீற்றின் தெய்வ நலம்

சிவனடியார்களின் முக்கிய சிவ சின்னங்களில் முதன்மை இடத்தை பிடிப்பது திருநீறு. திருநீறின் பயன் எண்ணில் அடங்கா.

பூதி அணிவது சாதனம் ஆதியில்
காதணி தாமிர குண்டலம் கண்டிகை
ஓதி அவர்க்கும் உருத்திர சாதனம்
தீதில் சிவயோகி சாதனம் தேரிலே.

இப்பாடல் மூலம் திருமூலர் கூறும் கருத்துயாதெனில், சிவனடியார்கள் அனிய வேண்டிய முக்கிய சிவ சின்னங்கள் 3 ஆகும் அதில் திருநீறு முதன்மையும் முதலும், இரண்டாவதாக செம்பிலான குண்டலத்தை காதிலும், உருத்திராக்க மாலையை கழுத்திலும் அணிய வேண்டும் என கூறியுள்ளார்.

திருநீறு, விபூதி, பசுமம், பசிதம், சாரம், இரட்சை, ஐஸ்வர்யம் என்ற பல பெயர்களையுடையது திருநீறு.

ஆன்மாக்களின் பாவங்களையெல்லாம் நீறு செய்வதினால் திருநீறு அல்லது பசுமம் என்று பெயர் பெற்றது. வி – மேலான; பூதி – ஐசுவரியம். மேலான ஐசுவரியத்தைத் தருவது விபூதி. இங்கே மேலான ஐசுவரியம் என்பது முத்திபேறு என உணர்க. அறியாமை அழியும்படி சிவஞானமாகிய சிவதத்துவத்தை விளக்குவதால் – பசிதம். ஆன்மாக்களின் மலமாசினைக் கழுவுவதால் – சாரம். ஆன்மாக்களைத் துன்பத்தினின்றும் நீக்கி இரட்சிப்பதனால் இரட்சை என பெயர் பெற்றது.

நீறில்லா நெற்றி பாழ் – என்கிறார் ஒளவையார். திருநீற்றை அன்புடன் பூசுவோர் எல்லா நோய்களும் நீங்கப் பெறுவர். அவ்வாறு பூசாதார் நோய்வாய்பட்டு செத்துப் பிறந்து உழலுவார்கள் என்கிறார் அப்பர் சுவாமிகள்.

அருநோய்கள் கெடவெண்ணீறு அணியாராகில்
அளியற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்
பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே

திருநீறு தரிக்கும் முறை

திருநீற்றை ஒருவருக்குத் தரும் போதும், நாம் பூசிக்கொள்ளும் போதும் சிவபெருமானுடைய ஐந்தெழுத்தை அன்புடன் ஓதுதல் வேண்டும். இந்த காரணத்தினால் திறுநீற்றுக்குப் பஞ்சாட்சரம் என்ற ஒரு பெயரும் அமைந்தது.

ஒருவன் உண்மையாக உழைத்து பணி புரிவானாயின் எஜமானனிடம் கூலிக்கு, கையை நீட்டிக் கெஞ்சிக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

“ ஐயா ! வேலையை ஒழுங்காகச் செய்தேன்; கொடும் கூலியை”– என்று கேட்பான். இது போன்று நாம் நாள் தோறும் அன்புடன் ஐந்தெழுத்தை ஓதி திருநீறு தரித்துக் கொண்டால் சிவபெருமானிடம் சிவகதியைத் தந்தருள வேண்டும் என்று கெஞ்சி கேட்க வேண்டிய அவசியம் இல்லை நாம் உரிமையுடன்

“தருவாய் சிவகதி” கேட்கலாம். இவ்வாறு கேட்கின்றார் அப்பர்பெருமான்

“………திருவாய் பொலிய சிவாயநம என்று நீறணிந்தேன், தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரசனே”

உண்மையிலேயே ஐந்தெழுத்தை ஓதி திருநீறு அணிய நேரம் இல்லையேல் இரண்டெழுத்தாகிய, சிவ சிவ என்று சொல்லி அணிய வேண்டும். மங்கலத்தைச் செய்வது சிவம் என்ற இரண்டுஎழுத்து. இதனை விளக்கவே வருகிறார் திருமந்திரம் அருளிய திருமூலர்,

சிவ சிவ என்கிலர் தீவினை யாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரு மாவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே !

தினமும் திருநீறு பூசும் போது பன்னிரெண்டு முறை இப்பாடலை ஓதினால் 108 முறை சிவநாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும் .

சிவபெருமான் தமது திருநுதலில் திருநீறு தரித்துள்ளார் என சுந்தரர் கூறுகிறார்.

நீறு தாங்கிய திருநுத லானை
நெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை
கூறு தாங்கிய கொள்கையி னானைக்
குற்றம் இல்லியைக் கற்றையம் சடைமேல்
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்கு
அரிய சோதியை வரிவராமல் உகளும்
சேறு தாங்கிய திருத்தினை நகருள்
சிவக்கொ ழுந்தினைச் செஞ்சடை மனனே!

திருநீறு பூசுவதற்காகவே, இறைவன் நம் நெற்றியை விசாலமாகவும், நீளமாகவும் படைத்தான். திருநீற்றைக் கையில் எடுத்து, அண்ணாந்து, சிவ மந்திரத்தைக் கூறிப் பூசிக்கொள்ள வேண்டும். கீழே சிந்தவிடக் கூடாது. செவிகள் மீதும், தோள்கள் மீதும் சிந்த பூசிக்கொள்ள வேண்டும். திருநீற்றை ஆள்காட்டி விரலால் தொட்டு பொட்டு போல் பூசுதல் கூடாது. நெற்றி நிறைய பூச வேண்டும். விபூதி அணிந்து கொண்டால் வியாதிகள் குறையும்.

தினந்தோறும் திருஞான சம்பந்தரின் திருநீற்றுப் பதிகத்தை ஓதி திருநீறு புனைந்தால் எல்லா நோய்களும், நாம் செய்த பாவங்களும் வெந்து சாம்பலாகிவிடும். , திருஞானசம்பந்தர் கூன் பாண்டியனின் நோயை திருநீற்று பதிகம் பாடி தீர்த்து வைத்ததாக.வரலாறு குறிப்பிடுகிறது .

திருஞானசம்பந்தரின் திருநீற்றுப்பதிகம்

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கந்திரு ஆலவாயான் திருநீறே

வேதத்தி லுள்ளதுநீறு வெந்துயர் தீர்ப்பதுநீறு
போதந் தருவதுநீறு புன்மை தவிர்ப்பதுநீறு
ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளதுநீறு
சீதப் புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே

முத்தி தருவதுநீறு முனிவர் அணிவதுநீறு
சத்தியு மாவதுநீறு தக்கோர் புகழ்வதுநீறு
பக்தி தருவதுநீறு பரவ இனியதுநீறு
சித்தி தருவதுநீறு திரு ஆலவாயான் திருநீறே

காண இனியதுநீறு கவினைத் தருவதுநீறு
பேணி அணிபவர்கெல்லாம் பெருமை கொடுப்பதுநீறு
மாணந் தகைவதுநீறு மதியைத் தருவதுநீறு
சேணந் தருவதுநீறு திரு ஆலவாயன் திருநீறே

பூச இனியதுநீறு புண்ணிய மாவதுநீறு
பேச இனியதுநீறு பெருந்தவத் தோர்களுக்கெல்லாம்
ஆசை கெடுப்பதுநீறு வந்தம தாவதுநீறு
தேசம் புகழ்வதுநீறு திரு ஆலவாயன் திருநீறே

அருந்தம தாவதுநீறு அவலம் அறுப்பதுநீறு
வருத்தந் தணிப்பதுநீறு வானம் அளிப்பதுநீறு
பொருத்தம தாவதுநீறு புண்ணியர் பூசும்வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த்திரு ஆலவாயன் திருநீறே

எயிலது வட்டதுநீறு இருமைக்கும் உள்ளதுநீறு
பயிலப் படுவதுநீறு பாக்கிய மாவதுநீறு
துயிலைத் தடுப்பதுநீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தாலவாயான் திருநீறே

இராவணனன் மேலதுநீறு எண்ணத் தகுவதுநீறு
பராவண மாவதுநீறு பாவம் அறுப்பதுநீறு
தராவண மாவதுநீறு தத்துவ மாவதுநீறு
அரா வணங்குந் திருமேனி ஆலவாயான் திருநீறே

மாலொடயனரியாத வண்ணமு முள்ளதுநீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடிநீறு
ஏல உடம்பிடர்தீர்க்கும் இன்பந் தருவதுநீறு
ஆலமுதுண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங்கூடாக்
கண்டிகைக் பிப்பதுநீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்டபொருளார் ஏந்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆலவாயான் திருநீறே

ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயான் திருநீற்றை
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயினதீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர்தாமே.