திருமூலரும் திருமந்திரத்தின் சிறப்பும்

சைவம் போற்றும் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவர் திருமூலர்.

அறுபத்துமூன்று நாயன்மார்களை அறிமுகப்படுத்தி பாடப்பெற்ற நூல் திருத்தொண்டத்தொகை, பாடியவர், நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர். அவர் பாடியது அறுபது பேர்களை, இவரது தாய் தந்தையார் மற்றும் இவர் ஆகிய மூவரையும் சேர்த்து சைவச் சான்றோர்கள் அறுபத்து மூவராக வணங்கினார்கள். அறுபது அடியார்களைப் பாடி வணங்கிய அவர் இரண்டே இரண்டு பேரைத் தான் பிரான் என்ற சொல்லைச் சேர்த்து பெருமைப் படுத்துகிறார். இது மற்ற அடியார்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு. யார் அந்த இருவர் ஒருவர் பிள்ளையார்(சம்பந்தர்) இன்னொருவர் திருமூலர்.

சம்பந்தரை எம்பிரான் என்றும், திருமூலரை நம்பிரான் என்றும் திருத்தொண்டத்தொகையில் போற்றியுள்ளார். நம்பிரான் என்றால் எப்போதும் நம்மை விட்டு பிரியாதவன் என்று பொருள். இப்படிப்பட்ட பெருமைக்குரிய திருமூல நாயானரால் எழுதப்பட்டதே திருமந்திரம் ஆகும்.

திருமந்திரத்தின் சிறப்பு

திருமந்திரம் தமிழ் ஆகமம் என்று சொல்லப்படும் அளவுக்கு ஒரு உயர்ந்த நூலாகும். திருமந்திரத்தின் சிறப்பு பற்றி பழம்பாடல் ஒன்று அழகாக எடுத்துரைக்கின்றது இதோ அந்த பாடல்

திருக்கோவில் செல்வார் திருமந்திர நூல்
உருக்கமுடன் கொண்டுசென் றோதின் – பெருக்க
அறமுதலாம் நான்கும் அருள்முதலாம் ஐந்தும்
உறவருள்வன் முக்கணிறை ஓது

திருமந்திரத்தில் மொத்தம் ஒன்பது தந்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு தந்திரமும் ஒரு ஆகமம்

  • முதல் தந்திரம் – காரணாகமத்தின் சாரம்
  • இரண்டாம் தந்திரம் – காமிகாகமத்தின் சாரம்
  • மூன்றாம் தந்திரம் – வீராகமத்தின் சாரம்
  • நான்காம் தந்திரம் – சிந்தாகமத்தின் சாரம்
  • ஐந்தாம் தந்திரம் – வாதுளாகமத்தின் சாரம்
  • ஆறாம் தந்திரம் – வியாமளாகமத்தின் சாரம்
  • ஏழாம் தந்திரம் – காலோத்தராகமம்
  • எட்டாம் தந்திரம் – சுப்பிராகமத்தின் சாரம்
  • ஒன்பதாம் தந்திரம் – மகுடாகமத்தின் சாரம்

இறைவனை எட்டும் இரண்டுமான பொருள் என்று மறைவான பொருளை உள்ளடக்கிக் கூறுவர் ஞானியர் “எட்டினோடு இரண்டும் அறியேனையே பட்டி மண்டபம் ஏற்றினை” என்பார் மணிவாசகர். திருமந்திரத்திலும் கூட ஒன்பதாம் தந்திரத்தில் இதே கருத்தை மெய்ப்பிக்க திருக்கூத்து தரிசனத்தில் 82 பாடல்கலை கொண்டு அமைத்தார் திருமூலர்.

திருமூலர் 28 ஆகமங்களின் சாரமாக திருமந்திரத்தை செய்தருளினார். இது உண்மையென உணர்த்தும் விதத்தில், பெரியபுராணத்தில் திருமூலர் வரலாற்றை 28 பாடல்களில் அமைத்தார் சேக்கிழார் .

இப்படிப்பட்ட திருமந்திரத்தை நாம் தினமும் ஓதினால் எம்பெருமானுடைய திருவருளால், நால்வகை அறமும் ஐவகை அருளும் பெற்றுய்வோம் என்பதில் எந்த வித ஐயப்பாடும் இல்லை

திருமந்திரம் ஓதுக திருவருல் பெறுக