சிவாயநம – சைவ சித்தாந்தம் கூறும் விளக்கம்

நமசிவாய, சிவாயநம இவ்விரண்டிலும் 5 எழுத்துக்களே, எழுத்துக்கள் இடம்மாறி உள்ளனவே அல்லாமல் எழுத்துக்கள் மாறவில்லை. சைவ சித்தாந்தம் கூறும் விளக்கம் யாதெனில்

‘ந’ என்னும் நகரவெழுத்து இறைவனின் மறைப்பாற்றலை உணர்த்தும் எழுத்து. படைக்கும் இறைவன் உயிர்களின் முற்பிறவிகளின் நிகழ்ந்த கர்மவினைகளை உயிர்களிடத்து மறைத்து அருள்கிறான். இறைவன் தனக்கே உரிய பேராற்றாலால், செயலால் உயிர் உய்ந்து உய்யும் பொருட்டு தன் அருட்சக்தியான திரோதான சக்தியைக் கொண்டு அம் மறைப்பினைச் செய்கிறான். இம் மறைப்பாற்றல் இல்லையெனில் உயிர்களானது பாவங்களை அறிந்து அவற்றை நுகராமல் இன்பம் தரும் புண்ணியத்தை மட்டும் அறிந்து அதனை அனுபவிக்கத் தலைப்படும். இதனால் உயிர் தொடர்பிறவியாக எடுத்து வருமே அல்லாது அது ஒழியாது. இறைவன் உயிர்கள் உய்யும் பொருட்டுத் தன் மறைப்பாற்றலைக் கொண்டு இன்ப துன்பங்களை அனுபவிக்க வைக்கின்றான். இதனை ‘ந’ என்னும் நகரவெழுத்து உணர்த்துவதாக சைவ சித்தாந்தம் கூறுகிறது.

இரணடாவதாக உள்ள ‘ம’ என்னும் எழுத்து ‘மலம்’ என்பதன் முதல் எழுத்து ஆகும். மலம் என்பது அழுக்கு. இம் மலம் அநாதிப் பொருள், அது பாசத்தைக் குறிக்கிறது. பாசங்கள் மூன்று, அவை ஆணவம், கன்மம், மாயை என்பன. ஆணவம் உயிரின் அறிவாற்றலை மறைத்து விழைவு(ஆசை), செயல் ஆகியவற்றை தூண்டுகிறது வினைகளைப் புரிய வைக்கின்றது. இவ்வினைகள் பாவம், புண்ணியம் என்று அறியப்பட்டு, நல்வினையாகவும், தீவினாயாகவும் வருகின்றன. இவ்விரு வினைகளை உயிர்கள் தாமே புரிவதால் அவ்வினைப்பயனை அனுபவிக்க வேண்டி பிறவிகளை எடுக்க வேண்டியுள்ளன. இப்பிறவிகளை எடுப்பதற்கான் செயலைப் புரிவது மாயை எனப்படும். அவ்வினைகளுக்கேற்ப உயிரானது பல்வகையான பிறப்புக்களை அடைகிறது. மாயை தனது தொழிற்பாட்டை மாயேயம் என்னும் காரிய மாயையைக் கொண்டே புரிகின்றது. உயிர்கள் தன் வினைப்பயனால் பெற்றுக்கொண்ட அனுபவத்தாலும் இறை அருளாலும் தனது அறிவில் தெளிவு காணுகின்றது. அறிவை, இறை அருளை நாடத் துணைபுறிவதால் மாயையை ஒரு ஒளிப் பொருளாகும். இவ் ஒளிப்பொருள் உயிரை இறைவனிடத்தில் சேர்க்கிறது.

‘சி’ என்னும் இவ்வெழுத்து சிவனை உணர்த்தும் தனி எழுத்து. சி என்னும் எழுத்து மங்கலம், சிறப்பு, புகழ் என்பனவற்றை உணர்த்தி நிற்கின்றது. இறைவனின் பொது மற்றும் சிறப்பு இயல்புகளை உள்ளடக்கியது.

‘வ’கரமானது நமசிவாய என உச்சரிக்கும் பொது வா என்னும் நெட்டெழுத்து நெடில் ஓசையைக் கொண்டு ஒலிக்கின்றொம். புணர்ச்சி நோக்கியும் இயல்பான உச்சரிப்புக்கும் ஏற்ற வகையில் ‘வ’ ஆனது ‘வா’ என நீண்டு ஒலிக்கின்றது. சிவன் இன்றேல் சக்தி இல்லை, சக்தி இன்றேல் சிவம் இல்லை என்பதற்கு ஒப்ப ‘சி’கரமும் ‘வ’கரமும் பிரிப்பின்றி நிற்கும் இதையே சைவ நெறி தாதான்மிய சம்பந்தம் என அழைக்கின்றது. சிவாயநம என்றாலும் நமசிவாய என்றாலும் சிவாயசிவ என்றாலும் சிவாய என்றாலும் சிவசிவ என்றாலும் சிவ என்றாலும் ‘சி’கரமும் ‘வ’கரமும் சேர்ந்தே இருக்கும். ‘வ’கர எழுத்தானது அம்மையை-இறைவனின் அருட்சக்தியை குறிப்பதாக உள்ளது.

‘ய’கரமானது நமசிவாய என்ற ஜந்தெழுத்து மந்திரத்தின் இறுதி எழுத்தாகும். ஆன்மா என்பது உயிர். உயிர்கள் பாசத்தால் தளைப்பட்டு,பின் இறைவன் பால் தலைப்படுகிறது. அவ்வுயிர் மலங்களோடு கூடிய வழி அதன் குணங்களை உடையதாகிறது. சிவ பரம்பொருளோடு கலந்தவழி சிவத்தின் குணங்களை உடையதாகிறது. எனவே உயிர் சிவனை அடைவதற்கு சக்தியாகிய அம்மையால் வழிநடத்தப்பட்டு சிவபுண்ணிய கருமங்களை செய்ய முனைகிறது. இவ்வாறு செய்வதால் இருவினை ஒப்பும் மலபரிபாகமும் வந்து அடைகின்றது. இது பக்குவநிலை ஆகும். இந்நிலையில் தன்னை உணரப்பெற்ற உயிர் சிவனுடைய முக்திநிலையை (வீடுபேறு) அடைகிறது.