சின் முத்திரையின் தத்துவம்

சின் முத்திரை = சின்முத்திரை. சின் – ஞானம்; முத்திரை – அடையாளம். ஞானத்தை கையால் காட்டும் அடையாளமே சின்முத்திரை. சுட்டு விரலால் பெருவிரல் அடியைச் சேர்த்து மற்ற மூன்று விரல்களையும் வேறாக ஒதுக்கிக் காட்டப்படும் முத்திரை. பெருவிரல் இறைவனையும், சுட்டுவிரல் ஆன்மாவையும் மற்ற மூன்று விரல்களில், நடுவிரல் ஆணவ மலத்தையும், மோதிரவிரல் கன்ம மலத்தையும், சுண்டு விரல் மாயா மலத்தையும் குறிக்கும்.

இதை பழம் பாடல் ஒன்று எடுத்துகாட்டுகிறது

செம் மலர் நோன்தாள் சேரல் ஒட்டாமல்
உயிரையெலாம் இயக்கம் செய்யும்
அம்மலம் கழீஇ மிகுந்த அன்பரோடு
மருவி நீர் அடையு முத்தி
இம்முறையாம் என நால்வர்க்(கு) இருவிரல்சின்
முத்திரையால் இயம்பி ஆல்கீழ்
மன்மதன்மேல் நுதற்கண் அனல் இறைத்திருந்த
குருபரனை வணக்கம் செய்வோம்

இதன் விளக்கமானது சிவந்த தாமரை மலர் போன்ற பாதத்தை உடைய இறைவனை உயிர்கள் சேராமல் உலக மாயையில் சிக்கி, ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களில் அழுந்தியிருப்பதைப் போக்கி, அன்புமிக்க அடியார்கள் கூட்டத்துடன் கூடி, நீங்கள் அடையக்கூடிய முக்தி இத்தன்மை உடையது என்று சனகாதி முனிவர் நால்வருக்கும் பெருவிரல் ஆள்காட்டி விரல்களில் சின்முத்திரையால் சொல்லாமற் சொல்லிக் கல்லால மர நிழலின் கீழ், மன்மதன் மேலே நெற்றிக்கண் நெருப்பை வீசி இறைத்து அமர்ந்திருக்கும் குருநாதரை வணங்குவோமாக. என்பது இதன் விளக்கமாகும். ஆக, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலமும் அகன்று உயிராகிய நாம் இறைவனோடு இரண்டற ஐக்கியமாவதை உணர்த்துவதே சின் முத்திரை தத்துவமாகும்.