மாணிக்கவாசகரின் பக்தி வைராக்கியம்

பால்நினைந் துட்டும் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே

ஒரு தாய் தன் குழந்தக்குப் பாலூட்டும் காலத்தைச் சரியாய் உணர்ந்து ஊட்டுவாள், அந்த தாயை விட என்மீது அளவற்ற அன்பை காட்டிய பெருமானே! பாவியாகிய என்னுடைய உடலை உருக்கி உள்ளத்தின் உள்ளே ஞான ஒளியைப் பெருக்கியவனே! என்றும் அழியா ஆனந்தமான தேனினைக் சொரிந்தவனே! என் பார்வையில் கட்டுப்படாது புறம் புறம் திரிந்த என் செல்வமே! சிவபெருமானே நான் உன்னைத் தொடர்ந்து வந்து உறுதியாய் பிடித்துக் கொண்டேன். இனி மேல் நீ என்னை விட்டு எங்கு எழுந்து அருள் செய்ய முடியும்?

இந்தப் பாடலில் மாணிக்கவாசகரின் பக்தி வைராக்கியத்தை நாம் காணலாம்.