கருணை நெறி

தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத மனிதர்கள், தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத உருவங்களுக்கு, தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத உயிர்களைப் பலிகொடுக்கிறார்கள்.

தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்த மனிதர்களாக இருந்தால், தங்களுக்கு வந்திருக்கும் நோய் என்ன? அது எப்படி வந்தது? அதை எப்படிப் போக்குவது? என்ன மருந்து சாப்பிடுவது? என்று தெரிந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள். அப்படிக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாமையால்தான், சில உருவங்கள் தங்களைக் காப்பாற்றும் என நினைத்து அதனிடம் பேசுகிறார்கள்.

அந்த உருவங்களும் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாதவை. காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்தால் அவைகள் நேராக ஆட்டு மந்தைகளுக்கும் கோழிப் பண்ணைகளுக்கும் சென்று பசியாறக் கடித்து தின்று திரும்பி வரும். அதனால் எப்படி வெளியே போக முடியும்? பூசாரிதான் உள்ளே வைத்துப் பூட்டி விடுகிறானே! எவனாவது ஏமாந்தவன் எதையாகிலும் கொண்டு வந்து “பலி” கொடுக்க மாட்டானா என்று, அவை உட்கார்ந்திருந்த இடத்திலேயே ஏங்கிக் கொன்டிருக்கும். அதனால் அது தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியாது.

இனி பலி கொடுக்கப்படும் உயிர்கள். அவைகளும் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள முடியாதவை. மனிதன் அவைகளை வெட்டும் போதும் அறுக்கும்போதும் “கீச்கீச்” சென்று அலறி அழுது மடிவதைத் தவிர, அவைகளால் வேறொன்றும் செய்ய இயலாது.

கரடி, புலி, சிறுத்தை, சிங்கம் முதலியன தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாதவை. அவைகளைக் கொண்டு வந்து எவரும் பலி கொடுப்பதில்லை. ஆகவே தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத மனிதர்கள், தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத உருவங்களுக்கு, தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத உயிர்களைப் பலி கொடுக்கிறார்கள் என்பது முடிவு.

நன்றி
கி. ஆ. பெ. விசுவநாதம்

யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே
ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே
கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே
மான முடையார் மதிப்பு.

– இனியவை நாற்பது

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?

-திருக்குறள்

About திருமதி. சிவசங்கரி

View all posts by திருமதி. சிவசங்கரி →

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன