கந்தர் அனுபூதி – முதல் ஐந்து பாடல்கள்

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.

கல்போன்ற நெஞ்சமும் இளகி உருகுமாறு செம்மையான இலக்கியத் தமிழ்ச் சொற்களால் தொடுக்கப்பெற்ற கந்தரநுபூதி என்னும் கவிமாலை, சரணம், என்று தம்மை வந்தடைந்தவர்களுக்கு அருள்புரியும் ஆறுமுகக் கடவுளின் அணிகலனாக, அமையும் பொருட்டு ஐந்து கரங்களையுடைய திருவிநாயகப்பெருமானின் திருவடிகளைப் பணிந்து வணங்குகின்றேன்

ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.

யானை முகத்தையுடைய கஜமுகாசுரனை போர்க்களத்தில் கொன்றழித்த விநாயகப்பெருமானின் சோதரனே! கந்தப்பெருமானே! ஆடிவரும் குதிரையைப்போன்ற மயில்வாகனமே! வேலாயுதமே! அழகான சேவலே! என்று துதிசெய்து திருப்பாடல்களைப் பாடுவதையே அடியேனின் வாழ்நாட்பணியாக இருக்கும்படி அருள்புரிவீராக!

உல்லாச, நிராகுல, யோக இதச்
சல்லாப, விநோதனும் நீ அலையோ?
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா சுரபூ பதியே.

திருமுருகப்பெருமானே! விண்ணோர்களின் மன்னரே! உள்ளக் களிப்பும் கலக்கமின்மையும் அற்று, பல்வகை யோக-மார்க்க வழிகள் சம்பந்தமான பேச்சுக்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியைத் தருபவர் தேவரீர் ஒருவரே அன்றோ! எல்லாவிதமான பந்தங்களும், யான், எனது எனப்படும் ஆணவ மலங்கள் அழிந்து தொலைவதற்குரிய மேலான ஆன்மிக உபதேசங்களை அடியேனுக்கு உபதேசித்தருள்வீராக!

வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே.

தேவரீரெ, பரம்பொருள் என்பது யாது? ஆகாயமோ? நீரோ? பூமியோ? நெருப்போ? காற்றோ? ஞானத்தினால் அறியக்கூடிய பொருளோ? ஓதப்படுகின்ற நான்கு வேதங்களோ? நான் என்று சொல்லப்படுகின்ற சீவனோ? மனமோ? நீயேநான்-நானேநீ என்று கூறி அடியேனை ஆட்கொண்ட ஆறுமுகக் கடவுளே!

வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.

சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் ஆகிய ஆணவ, கன்ம, மாயா மலையை தொளைத்து ஊடுருவிச் செல்லும்படியாக விடுவித்த வேலாயுதத்தையுடைய கந்தப்பெருமானே!. மனைவி மக்கள் என்னும் பந்தத்தில் அகப்பட்டு அடியேன் அழிந்துபோவது நியாயமாகுமோ? என்னைக் காப்பது உன் கடமை! நான் இப்படி தவிப்பது என் ஆன்மாவின் உண்மை சொரூபத்திற்கு தகாது. அது உன் கருணை திறத்திற்கும் தகாது

மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே.

அஷ்டதச வித்தைகளை நமக்காக இறைவன் படைத்திருந்தும் நாம் அவற்றைக் கடைபிடிக்காமல் பிரபஞ்ச மாயையின் சொரூபமான பொன், பெண், மண் எனும் இவ்வுலக மாயையில் அகப்பட்டுக் கொண்டு அதை உண்மை என்று நம்பி அடியேன் என்றும் ஒழிந்திலனே! மகா மாயயைக் களையும் நீ அல்லவோ! உன் ஒரு நாமம் சொன்னாலே சகமாயயையும் அழியுமே!

About சிவா மூர்த்தி

View all posts by சிவா மூர்த்தி →

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன