கந்தர் அனுபூதி – 6 முதல் 10 வரை

திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
.. பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே.

பிரபஞ்ச வாழ்க்கையான தினைப்புனத்தில் பக்திப் பயிரை பாதுகாத்துவந்த பக்குவப்பட்ட ஆன்மாவின் நிலை அறிந்து, குன்றாத, அதீதகாதல் கொண்டு தானே வலிய ஆட்கொளும் முருகப்பெருமான்! அவரை தியானிக்கும் அடியாரின், கல்மனத்திலும் கருணாகரனின் திருவடித்தாமரைப் பூ போல மலரும்.

கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.

அகங்காரத்தால் அழிகின்ற மனமே! தொடர்ந்துவருகின்ற பிறவித் துன்பத்தை தூளாக்கவும், பற்றினைச் சுட்டெரித்து, வினைகளை நீக்கி! நீ முக்திபெறும் வழியைக் கூறுகின்றேன், கேட்பாயாக! உன்னிடம் உள்ள பொருட்பற்றோழிய பிறருக்குத் தானமாகக் கொடுப்பாயாக! கூர்மையான ஞானவேலினைத் தாங்கிய இறைவனின் திருவடிகளை நினைந்து தியானம் செய்துவருவாயாக!

அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பெரு தானவ நாசகனே.

தானே மெய்ப்பொருளாக இருப்பவரும், கருணையினால் உருவத் திருமேனிகொண்டவரும், மும்மதச் சூரனை அழித்தவருமாகிய மலையரசனின் குமாரியின் குமாரன் தனக்கு உபதேசித்து அருளியதால், செம்பில் இயல்பாக இருக்கும் களிம்பு தானாக நீங்குவது போல தன்னைப் பற்றி இருந்த ஊர், சுற்றம், சரீரம் என்கிற மாயை தெளியப்பெற்றேன். அநாதியான ஆன்மாவைப் பற்றி இருக்கும் மாயை ஒழிவதென்றால் அது விந்தையே!

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல, நிர்பயனே.

மும்மலம் நீங்க மாயையாகிய கிரவுஞ்ச மலை மீது வேலையை ஏவி அழித்தவனே. துன்பமும் பயமும் அற்ற திருமுருகப்பெருமானே! தேன்சொரியும் நறுமண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூந்தலையுடைய பெண்களின் மோகவலையில் சிக்கி ஊஞ்சல் போல் அலையும் இயல்பை என்று விடப் பெறுவேன்?

கார் மா மிசை காலன் வரில், கலபத்
தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
தார் மார்ப, வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடுவே லவனே.

மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட மார்பினையுடையவரே! சூரபத்மா என்கிற மா மரம் அழிந்துபோக வேலைப் பிரயோகித்து, இழந்துபோன சாம்ராஜ்யத்தை இந்திரனுக்கு மீட்டு கொடுத்ததுபோல, திருமுருகப்பெருமானே! கரிய நிற எருமைக்கடாவின்மீது அடியேனின் உயிரைக் கவர்ந்து செல்லவேண்டி யமன் வரும்பொழுது அழகிய தோகைகளையுடைய மயிலின்மீது ஏறி அடியேன் முன்வந்து காப்பாற்றியருள்வீராக!

About சிவா மூர்த்தி

View all posts by சிவா மூர்த்தி →

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன