கந்தர் அனுபூதி – 36 முதல் 40 வரை

நாதா, குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பத சேகரனே.

பிரமன் முதலான விண்ணோர் தலையுச்சிமேல் அணியும் செந்தாமரை பாதங்களை உடையோனே! மின்னல் ஒளிவீசும் பக்குவப்பட்ட ஆண்மாவை வலிய தலையில் வைத்து கொண்டடுபவனே! “நாதரே, குமராய நம” என்று வணங்கி வேண்டிய சிவனாருக்கு உபதேசித்த பிரணவ மந்திரத்தின் பொருள்தான் யாதோ? யான் அறியக்கூடாதோ?

கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே.

மனமே! கிரவுஞ்ச மலைமீது செலுத்திய ஆற்றல்மிக்க வெற்றி வேலை உடைய கந்தக் கடவுளின் அடியார்களின் திருக் கூட்டத்தை சேர்ந்தவன் என்ற பதவியை அடைவதையே விரும்புவாய். நான்னெனும் ஆணவத்தை பொறுமையாகிய அறிவைக்கொண்டு வேருடன் அரிந்து தள்ளிவிடுவாயாக!

ஆதாளியை, ஒன்று அறியேனை அறத்
தீது ஆளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே.

கூதாள மலர் மாலையை அணிந்தவனே! வேடர் குல வள்ளியம்மையாரின் தலைவரே! வேதாளக் கூட்டத்தினர் புகழ்கின்ற வேலாயுதனே! வீண்பேச்சு பேசுபவனாகவும் நல்லவை யாது என அறியா, தீய குணமுடைய அடியேனை ஒரு பொருளாகக் கருதி தேவரீர் ஆண்டருளிய கருணையானது என் உறைப்பேன்?

மாஏழ் சனனம் கெட மாயைவிடா
மூஏடணை என்று முடிந்திடுமோ
கோவே, குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவ சங்கர தேசிகனே.

உலகாளும் மாமன்னரே! வேடர் குலத்தவரும் மின்னற்கொடி போன்ற வள்ளியின் தோள்களைச் சேரும் கடவுளே! சிவபெருமானுக்குக் குருமூர்த்தியானவரே! பெரிய ஏழு வகையான பிறப்பையும் நீக்கி, பிரகிருதி மாயையோடு சம்பந்தப்பட்ட மூன்று வகையான ஆசைகளும் எப்போது அடியேன் ஓடுங்கப் பெறுவேனோ?

வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ?
சுனையோடு, அருவித் துறையோடு, பசுந்
தினையோடு, இதணோடு திரிந்தவனே.

வள்ளி மலையின் சுனைகளிடத்தும், அருவிகள் விழுமிடத்தும், பசுமையான தினைப் புனத்திடத்தும் வள்ளிப் பிராட்டியாரை காணும் பொருட்டுத் திரிந்தவரே! இருவினைகளையும் ஒழிக்கும் பேராற்றல் மிக்க ஞானச் சுடர் வீசும் வேலாயுதத்தை அடியேன் மறவேன்! அத்தகைய அடியேன் இல்லற வாழ்வில் அகப்பட்டுக் கலங்கி அறிவை இழந்து மயக்கம் அடையலாகுமோ?

About சிவா மூர்த்தி

View all posts by சிவா மூர்த்தி →

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன