கந்தர் அனுபூதி – 31 முதல் 35 வரை

பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே.

பிரணவ சொருபவமான மயிலை வாகனமாகக் கொண்ட முருகப்பெருமானே! கேவல தசையிலே, அஞ்ஞான இருளிலே, கிடந்த என்னைக் கடைத்தேர, தனு கரண புவன போகங்களோடு, மாயா மலத்தையும் தந்தீர்! அடியேனை இங்ஙனம் மாயை வாழ்வில் தள்ளி சிக்கவைத்தற்கு ஏற்கனவே அடியேன் செய்துள்ள தாழ்வான செயல்கள் காரணமோ? அது எவ்வாறாயினும் போகட்டும் நீ சுகமாக இருப்பாயாக!

கலையே பதறிக், கதறித் தலையூடு
அலையே படுமாறு, அதுவாய் விடவோ?
கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
மலையே, மலை கூறிடு வாகையனே.

கொலை செய்யும் தொழிலையே தமது குல ஒழுக்கமாகக்கொண்ட வேடர் குலத்தில் தோன்றிய பெண்யானை போன்ற வள்ளி பிராட்டியைத் தழுவுகின்ற மலை போன்ற தோள்களை உடையவனே. கிரவுஞ்ச கிரியை இரு கூறு ஆக்கியவனே, சமய வாதிகளுடன் சாஸ்த்ர நூல்களை மனக் கலக்கத்துடன் சத்தம் போட்டு வாதிட்டு, பிணங்கி, வாத பிரதிவாத மாயையிலே நான் மூழ்கிவிடுவேனோ? கூடாது!

சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா, முருகா, கருணாகரனே.

கங்கை நதி ஈன்ற வரத மூர்த்தியே! கந்தப்பெருமானே! திருமுருகப்பெருமானே! கருணைக்கு இருப்பிடமானவரே! மனச் சஞ்சலத்தை தரும் இல்லற வாழ்க்கையுடன் செல்வம் என்னும் விந்தியமலைக்காடு போன்ற சிக்கல் நிறைந்த சூழலை அடியேன் என்று விட்டு விலகுவேன்?

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல, சண்முகனே
கங்காநதி பால, க்ருபாகரனே.

சிற்றின்ப ஆசை விலக்கிய மனதில் சுத்த சித்தி சொரூபமான மயிலில் வருபவரே! சண்முக மூர்த்தியே! கங்கை நதியின் பால குமாரனே! கிருபாகர மூர்த்தியே! அழகிய மாதர்கள் நிமித்தம் தீய வழியில் சென்று அடியேன் மனம் குலைந்து போகா வண்ணம் காமத்தை போர் செய்து வெல்ல வரந்தந்து அருள்வாயாக!

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?
மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா, சுர பூபதியே.

பக்குவப்பட்ட ஆன்மா பிறை போன்று ஒளிவீசும், அத்தகைய ஆன்மாவாகிய வள்ளியை தவிர வேறு யாவர்க்கும் அனுக்ரகம் செய்யாதரே! விண்ணுக்கும் மண்ணுக்கும் தலைவனே! அரசனே! பிரமன் படைத வினையாளான உடலைப் புறக்கணித்துவிட்டு அடியேன் நற்கதியை அடையும்படி செந்தாமரை மலர் போன்ற உனது வீரக்கழல்கள் அணியப்பெற்ற திருவடிகளை அடியேனுக்கு எப்போது அருள்வீர்?

About சிவா மூர்த்தி

View all posts by சிவா மூர்த்தி →

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன