கந்தர் அனுபூதி – 26 முதல் 30 வரை

ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத, மன
அதீதா சுரலோக சிகாமணியே.

வேத ஆகமங்களில் காணப்படும் உபதேசப் பொருட்களில் பொதிந்து விளங்கும் பூரணப் பொருளே, தேவலோக சிரோரத்தினமே, ஒருதுணையும் இல்லாத அடியேன் நின் திருவருளைப் பெற்று உய்யுமாறு சிறிதளவேனும் தேவரீர் எண்ணவில்லையே! நீ இப்படி சும்மா இருப்பது உனக்கு நியாயமாகுமா?

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
பொன்னே, மணியே, பொருளே, அருளே,
மன்னே, மயில் ஏறிய வானவனே.

பொன்னே! மணியே! செல்வமே! முக்தியாகிய அருட்பேற்றினை அளிப்பவரே! உலகை ஆளும் மாமன்னரே! மயில் வாகனத்தில் ஏறிவரும் முழுமுதற் கடவுளே! மின்னலைப் போலத் தோன்றி உடனே மறையும் நிலையற்ற வாழ்வை விரும்பியவனாகிய அடியேன் இவ்வாறு இருப்பதற்குக் காரணம் அடியேனின் வினைப்பயன் தானோ?

ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
ஞானாகரனே, நவிலத் தகுமோ?
யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே.

அழிவில்லா பெருமானே! கூரிய வேல் ஏந்திய மாமன்னரே! ஞானத்தின் உறைவிடமே! சச்சிதானந்த பெருமானே, யான் என்னும் ஆணவமுடைய அடியேனை தேவரீர் ஆட்கொண்டு அருளி எல்லாம் தானாகி நிலைத்திருக்கும் மேலான நிலையை இத்தன்மையது என்று விளக்கிக் கூறமுடியுமோ? முடியாது.

இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே.

ஆதியில் பற்றிய ஆணவ மலம் நீங்க, மாயையில் என்னை இட்டவன் நீ, பொல்லாதவனாகிய நான் அறியாமையினால் செய்ததை மன்னித்து அருளமாட்டீரோ! காமக் குரோதங்களாகிய அசுரரை வதைதவனே! மற்போர் செய்வதற்குரிய பன்னிரண்டு தோள்களிலும் அடியேனின் சொற்களாலாகிய பாடல்களையே மாலைகளாக அணிந்து ஒளிவீசும் வேலாயுதரே!

செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று
ஒவ்வாதது என உணர்வித் ததுதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.

மாலை நேர சிவந்த வானத்தின் உருவில் விளங்கும் வேலாயுதப் பெருமான் அன்று அடியேனுக்கு உபதேசித்தருளிய ஒப்பற்ற ஞான உபதேசத்தை ஒருவர் அறிந்து அனுபவிக்க முடியுமே தவிர, எங்ஙனம் மற்றொருவருக்குச் சொல்ல இயலும்?

About சிவா மூர்த்தி

View all posts by சிவா மூர்த்தி →

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன