கந்தர் அனுபூதி – 21 முதல் 25 வரை

கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா, முருகா, மயில் வாகனனே
விரதா, சுர சூர விபாடணனே.

கேட்ட வரங்களை வழங்கும் வள்ளலே! திருமுருகப்பெருமானே! மயில் வாகனக் கடவுளே! அடியார்களை ரட்சிப்பதையே விரதமாகக் கொண்டவனே, அசுர கூட்டத்தையும் சூரபத்மனையும் அழித்தவனே! நினைவும் மறதியும் அற்ற நிர்விகல்ப நிலையை நான் உணர, உன்னுடைய இரண்டு திருவடித் தாமரைகளை அளிப்பதற்கு எப்போது உன் திரு உள்ளம் இசைவீரோ!

காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி, மேருவையே.

இச்சாசக்தி வள்ளி, கிரியாசக்தி தெய்வயானை, ஞானசக்தி வேல், உலகத்தில் உள்ள
பொருள்கள் எல்லாம் ஆண்டவனுடைய நிழல்கள். உலகப் பொருளை நுகர்ந்தால் தான் ஆணவம் தேயும். அதற்கு இச்சை வேண்டும், வள்ளியான இச்சாசக்தியை பணிந்தான். யார் அவன்? அவன் தேவலோகத் தலைவன், மேரு மலையைப் போன்ற கம்பீரம் கொண்ட இலங்காளை, முருகன்!

அடியைக் குறியாது அறியா மையினால்
முடியக் கெடவோ? முறையோ? முறையோ?
வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே.

கூர்மையும் ஆற்றலும் உடைய வேலாயுதத்தை ஏந்தியவாறு உலகை ஆளும் மாமன்னரே! குணக்குன்றே! தன்னை அறியாது, தனக்கு அடியான ஆதியை அறியாது, அடியேன் அடியோடு அழிந்து போகலாமோ? இத்தகைய முடிவு எனக்கு வருவது என்னுடைய ஆன்ம சொரூபத்திற்கு பொருந்தாது. அது உன் கருணைக்கும் தகாது. அஞ்ஞானம் சூழ்ந்த ஆன்மாவாகிய வள்ளியை ஆட்கொண்டு, உன்னுடன் சேர்த்துக்கொண்டு ஞான வாழ்வு அளித்தவன் நீதானே!

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல, புரந்தர பூபதியே.

முழு மாயா சொரூபமான கிரவுஞ்ச மலையில் ஒளிந்திருந்த ஆணமே உருவான அசுரன் சூரபன்மனை வேரொடு தொளைத்து வேலவனே! கூரிய வேல் போன்ற கண்களையுடைய மாதர்களின் கொங்கையிலே சேரும் விருப்பத்தை உடைய அடியேனின் மனம் தேவரீரின் திருவருள் கிடைக்கவேண்டும் என்று எண்ணும் நற்பேற்றினைப் பெறுமோ?

மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?
கையோ, அயிலோ, கழலோ முழுதும்
செய்யோய், மயில் ஏறிய சேவகனே.

என்றும் நிலையானது என மகிழ்ந்து, கொடிய தீவினையால் வந்த வாழ்க்கையை களித்து மகிழ்ந்து, ஐயோ! அடியேன் அலைதல் முறையோ? திருக்கரங்கள் மட்டுமன்றி, கையில் ஏந்தும் வேலாயுதம், வீரக்கழல்கள் அணியப்பெற்ற திருவடிகள் ஆகியவை எல்லாம் செந்நிறமாய் அமைந்து, மயில் வாகனத்தின் மீது ஏறிய மாவீரரே!

About சிவா மூர்த்தி

View all posts by சிவா மூர்த்தி →

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன