கந்தர் அனுபூதி – 16 முதல் 20 வரை

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக துரந்தரனே.

ஆன்மாவைப் பற்றிய பழவினையான சூரபன்மன் இறந்தொழியும்படி வேலாயுதத்தைச் செலுத்திய சூரரே! அடியேன், பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, நல்லது, கெட்டது எது என ஆராய்ந்து அறியாது புது வினையால், யான் இறந்தும் பிறந்தும் அலைந்து திரிவது தகுமோ? தெய்வீக வீரரே!

யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர், நடவீர் இனியே.

செல்வச் செருக்கைவிட கல்விச் செருக்கு கொடியது. தமக்குக் கிடைத்த கல்வி அறிவும் ஞானமும் இறைவனின் திருவருளினால் வாய்க்கப்பெற்றேன் என உணர்ந்து. இந்நிலவுலகில் ஆசையால் விளையும் மயக்கத்தை நீக்கி, தர்மத்தையும் ஒழுக்கத்தையும் கடைபிடித்து அறநெறியில் சென்றுசேர்வீர்களாக; திருமுருகப்பெருமான் அருட்கொடையாக அளித்த நாவைக் கொண்டு அப்பரம்பொருளின் புகழை ஓதிக்கொண்டிருப்பீர்களாக!

உதியா, மரியா, உணரா, மறவா,
விதி மால் அறியா விமலன் புதல்வா,
அதிகா, அநகா, அபயா, அமரா
பதி காவல, சூர பயங் கரனே.

பிறவாமலும், இறவாமலும், உணராமலும், மறவாமலும், பிரமன் திருமால் தேடிக் காண முடியாத, இயற்கையாகவே மலங்களில் நின்று நீங்கிய சிவபெருமானின் குமாரனே, யாவரினும் மேம்பட்டவரே! பாவமற்றவரே! புகலிடம் அளிக்கும் மூர்த்தியே! வானுலகைக் காத்தருளும் பெருமானே! சூரபன்மனுக்கு அச்சம் தருபவரே!

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.

கூரிய வேலாயுதத்தை ஏந்தியவாறு பிரபஞ்சத்தை ஆளும் ஆதியும் அந்தமும் இல்லாத மாமன்னரே! வறுமை என்னும் ஒரு பாவி தோன்றியவுடனே அழகும் செல்வமும் நல்ல மனமும் குணமும் குடும்பத்தின் பெருமையும் குலத்தின் பெருமையும் ஒருவரை விட்டுப் போய்விடுகின்றனவே!

அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
புரிதாரக, நாக புரந்தரனே.

எங்கும் விரிந்து எதையும் தாங்கும் பொறுப்பை உடைய பராக்ரமசாலியே, தேவர்கள் சதா தியானம் செய்யும் பிரவண சொரூபியே, விண்ணுலகத்தைக் காப்பவனே, கிடைப்பதற்கு அரிதாகிய மெய்யுணர்வாகிய சிவஞானத்தை அடியேனுக்கு உரியவை ஆகும்படி எனக்கு உபதேசம் செய்த பெருமையை என்னவென்று சொல்வது?

About சிவா மூர்த்தி

View all posts by சிவா மூர்த்தி →

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன