கந்தர் அனுபூதி – 11 முதல் 15 வரை

கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே.

திருச்செங்கோட்டுமலைமீது வதியும் வேலாயுதனே! ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனப்படும் நான்கு வித கவித் திறமையை அருளியதோடு, நான்கு வேதங்களின் மெய்ப்பொருளை அடியார்களுக்கு வழங்கியருளும் பெருமாளே! தேவ லோகத்தின் மணியானவனே! கூகா என கூச்சலிட்டு அடியேனின் சுற்றத்தார் ஒன்றுகூடி அழ அடியேன் இறந்துபோகா வண்ணம் உண்மை ஞானப்பொருளை எனக்கு உபதேசித்த பரம்பொருளே!

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
.. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.

வள்ளியாகிய பக்குவப்பட்ட ஜீவனை, ஐம்புலன்களாகயே சகோதரர்களுக்கும், மனமாகிய தந்தைக்கும் தெரியாமல் அவள் உள்ளத்தைக் கவர்ந்த கள்வனாகிய பிறப்பும் இறப்பு இல்லாத திருமுருகப்பெருமான், பேசாத மவுன நிலையில் சும்மா இருப்பாயாக! என்று அடியேனுக்கு உபதேசித்தவுடனே இவ்வுலகப் பொருள் எல்லாம் மறைந்துபோனது வியப்பாகவுள்ளது!

.. முருகன், தனிவேல் முனி, நம் குரு .. என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உருவன்று, அருவன்று, உளதுதன்று, இலதுதன்று,
இருளன்று, ஒளியன்று என நின்றதுவே.

பரம் பொருளின் இலக்கணத்தை, உருவமுடையவர்; உருமற்றவர்; உள்ளதோர் பொருள்; இல்லாத பொருள்; இருள் சூழ்ந்த பொருள்; ஒளி பொருந்திய பொருள், என வரையறுத்துக் கூற இயலாத பொருளை முருகனே குருவாக வந்து, அவன் அருளையே துணையாகக்கொண்டு அறியலாமே தவிர வெறும் பகுத்தறிவினால் காண முடியுமோ?

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே.

மனமே! உடல், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐம்பொறிகள் வழியாக உண்டாகும் ஆசைகளை உறுதியாக விட்டு, ஞானச் சுடர் வீசுகின்ற வேலாயுதத்தை கையில் ஏந்திய முருகப் பெருமானின் திருவடிகளை அடைந்து முக்தியைப் பெறுவாயாக!.

முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ, எண் குண பஞ்சரனே.

போர் புரிவதில் விருப்பமுள்ள தேவர்களும், பூவுலகத்தவரும் புகழ்ந்து துதிக்கின்ற, தன் வயத்தம், தூய்மை, இயற்கையறிவு, முற்றறிவு, பற்றின்மை, பேரருள், எல்லாம்வன்மை, வரம்பிலா இன்பம் என்னும் எட்டு வகையான தெய்வீகக் குணங்களாலாகிய பஞ்சரத்தில் வதியும் மகா குருவே! முருகா, குமரா, குகா! என்று மனம் உருகி அழைக்கும் செயலொழுக்கத்தையும் ஞானத்தையும் எப்போது அருள்வீர்?

About சிவா மூர்த்தி

View all posts by சிவா மூர்த்தி →

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன