சும்மா இருப்பதும் சுகமே

நம் அன்றாட வாழ்வில் சும்மா இருத்தல் என்ற வார்த்தையை பல சமயங்களில் பயன்படுத்துகிறோம். ஒருவர் நமக்கு விரும்பத்தகாத செய்திகளை பேசும் போது சும்மா இரு என்று அவர் பேசுவதை தடை செய்கிறோம். வயதானவர் வேலைகளை செய்யும் போதும், குழந்தைகள் குறும்புகளை செய்யும் போதும், காரணமின்றி ஒருவர் பேசும் போதும், அவசியமில்லாத செயல்களை செய்யும் போதும் அதை தடுப்பதற்காக அவர்களை சும்மா இருங்கள் என்கிறோம்.

சில சமயங்களில் எந்த ஒரு செயலிலும் ஈடுபடாமல், ஓய்வெடுத்தலை சும்மா இருக்கின்றேன் என்று குறிப்பிடுகிறோம். எதையும் செய்யாமல் சும்மா இருப்பதும் சுகம்தான் என்கிறார் திருமூலர்,

மோனம் கைவந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மோனம் கைவந்தோர்க்குச் சித்தியும் முன்நிற்கும்
மோனம் கைவந்து ஊமையாம் மொழிமுற்றும்காண்
மோனம் கைவந்து ஐங்கருமமும் முன்னுமே.

மவுனநிலையை அடையப் பெற்றவர்களுக்கு வீட்டின்ப பேறு(முக்தி) கிடைக்கும், எட்டுவகை சித்திகளும் ஏவல் செய்யும், பிரணவப் பொருள் விளக்கிவிட்ட நிலையில் அவரே பரம்பொருள் சொரூபம் ஆவார். ஐங்கருமமும்(ஐந்துவகையான தொழில்கள், படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்) செய்ய இயலும்.
மேலும் அவர் மவுன நிலையின் நிலையை,

வாக்கும் மனமும் இரண்டும் மவுனமாம்
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்
வாக்கும் மனமும் மவுனமாம் சுத்தரே
ஆக்கும் அச்சுத்தத்தை யார் அறிவார்களே.

வாய் மட்டும் பேசாதிருப்பது ஊமை நிலையாகும். வாக்கும்(வாய்), மனமும் செயலற்று அடங்கி இருத்தல் மவுன நிலையாகும். இத்தூய்மையான மவுன நிலையே நன்மை பயக்கும் ஆன்மீக நிலையாகும்.

முருகன் உபதேசித்த மந்திரம் “சும்மா இரு”

அருணகிரிநாதர் தீய வழியில் ஈடுபட்டு, தொழுநோயுற்று, அதன் கொடுமையால் கோபுர உச்சியிலிருந்து, கீழே குதிக்கும் போது, தன்னை ஒருவர் சும்மா இரு என்று சொன்னதாக சொல்கிறார், மேலும் அவன் யார், எத்தகையவன் என்றும் கந்தர் அனுபூதியில் விளக்குகிறார்.

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான், இறவான்
சும்மா இருசொல் அறஎன் றலுமே
அம்மா பொருளொன் றுமறிந் திலனே.

பொன்னிற மானின் வயிற்றில் பிறந்த வள்ளியம்மையைத் திருடிய திருடன், எங்குருவாகிய பிறப்பு இறப்பு அற்ற முருகப்பெருமான். மனமடங்கி மௌனமாக இரு (சும்மா இரு) என உபதேசித்து, சொல் அற – உன் தற்கொலை எண்ணத்தை மாற்று என்றும் சொல்கிறார்.
மேலும் கந்தரலங்காரத்தில் அவர்,

வேதா கமசித்ர வேலா யுதன்வெட்சி பூத்ததண்டைச்
பாதார விந்த மரணாக அல்லும் பகலுமில்லாச்
சூதான தற்ற வெளிக்கே யொளித்துச்சும் மாவிருக்கப்
போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே.

இறைவனின் பொற்பாதங்கள் வெட்சி பூக்களையும், தண்டையும் அணிந்து, செந்தாமரை மலர்களைப் போல அழகாக விளங்குகிறது. அவற்றை மௌனமாக சிந்தித்து சும்மா இருத்தல் சிறந்த ஆன்மீக நெறியாகும் என உபதேசித்ததாக சொல்கிறார்

பஞ்சபூதங்களாகிய நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் ஆகியவற்றால் ஆன உடலில் இல்லாமல், எவராலும் அறிய இயலாத மௌன பஞ்சரம் எனும் தனி வீட்டில் சும்மா இரு, சூரகுலம் அழித்த வேலன் உபதேசித்தான் என்கிறார் கீழ் வரும் பாடலில்

ஒருபூ தருமறி யாத்தனி வீட்டி லுரையுணர்வற்
றிருபூத வீட்டி லிராமலென் றானிரு கோட்டொருகைப்
பொருபூ தரமுரித் தேகாச மிட்ட புரந்தகற்குக்
குருபூத வேலவ னிட்டூர சூர குலாந்தகனே

எனவே சும்மா இருந்து சுகம் பெறுவோம்