அபிராமி அருள் பெற்ற அபிராமி பட்டர்

“ராமி” என்றால் எழில் கோலத்தால் ரமிக்கச் செய்பவள். “அபிராமி” என்றால் அளவில்லாத தன் பேரழகால் அதிகமாக ரமிக்கச் செய்பவள் என்பது பொருள். கலைமகள் அன்னையை போற்றி வழிபட்ட தலமாகும் இது. இத்தலத்தின் பிரதான மூர்த்தியாக விளங்குபவர் அமிர்தகடேச்சுரர்.  இப்பெருமான் மார்கண்டேயனை எமனிடமிருந்து காக்க, அவனை காலால் உதைத்து “காலசம்ஹாரமூர்த்தி” எனவும் பெயர் பெற்று விளங்குகிறார்.

இப்புனித ஊரில் அல்லும் பகலும் அம்பிகையை தியானித்து அன்னையை பல வடிங்களில் தரிசித்தவர் சுப்ரமணியர் உச்ச தரிசனமான ஒளிவடிவாகமும் கண்டவர். இக்கோவிலில் உபாசகராக இருந்த இவர் தைத்திங்கள் அமாவாசை பிரதமையன்று உச்சிவேளையில் தியானத்தில் அமர்ந்து மனக்கண்ணில் அன்னையை வழிபட்டார்.

அவ்வேளையில் தஞ்சை மன்னர் சரபோஜி சந்நிதி வந்தார். மன்னரிடம் சுப்ரமணியர் மீது பொறாமை கொண்ட போலிபக்தர்கள் பித்தன் என்று உரைத்தனர். அதை சோதிக்கும் விதமாக மன்னர் சுப்ரமணியர் அருகில் சென்று எழுப்பி, “இன்று என்ன திதி?” என வினவ மனதுள் அம்பிகையை முழுநிலவு வடிவாக கண்டுகொண்டிருந்த சுப்ரமணியர் தன்னிலை மறந்து பெளர்ணமி என உரைத்துவிட்டார்.

“நீர் பித்தன் தான்”, என சினம் கொண்ட மன்னர், “மாலை நிலவு வரவேண்டும். இல்லாவிடில் அரிதண்டம் ஏற்றி அமர வைப்பேன்” எனக் கூறி அரிதண்டம் அமைக்க கட்டளை இட்டார்.

அரிதண்டம் என்பது நூறு கயிறுகள் கொண்டு உறி கட்டி அதன் கீழே தீக்குழி அமைப்பது ஆகும். கயிறுகள் ஒவ்வொன்றாக அறுந்து விழுந்து முடிவில் தீக்குழியில் விழநேரிடும்.

பிழைசெய்யா சுப்ரமணியர் உறியில் நின்று கள்ளவாரணப் பிள்ளையாரை முன் துதியாக வைத்து அந்தாதி தொடங்கினார். அம்பிகையின் ஒவ்வொரு வடிவையும் தரிசித்து பாடல்களை பாடிக்கொண்டே வந்தார், மெய்மறந்த அம்பிகை 78 வது பாடலாக

செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராமவல்லி அணிதரளக்
கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொடுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதி வைத்தேன் என் துணைவிழிக்கே

எனும் பாடலைப் பாடும் போது நிலவு என்று சொன்னவுடன், நினைவு வந்த அம்பிகை தனது இடச் செவித் தாடங்கத்தை கழற்றி வானில் வீசினாள். தாடங்கம் முழுமதியாக தோன்றி ஒளிவீசியது. அனைவரும் அன்னையின் நிலவு வடிவான தரிசனத்தை புறக்கண்ணால் கண்டனர். மோன நிலை கலையாத சுப்ரமணியர் அன்னையின் அருளால் எஞ்சிய பாடல்களை பாடி அந்தாதியை நிறைவு செய்தார்.

அவரை கீழே இறக்கி, மன்னரும் மக்களும் சுப்ரமணியர் காலில் விழுந்து வணங்கினர். மன்னர் சுப்ரமணியருக்கு ‘அபிராமி பட்டர்’ எனும் சிறப்புப்பெயரையும், அவரது வழி வருவோருக்கு ‘பாரதி’ எனும் சிறப்புப்பெயரையும் அளித்தார்.

இன்னலுக்கு ஆட்பட்ட பக்தர்கள் சரணடையும் போது இரச்சித்து காப்பாள் அன்னை அபிராமி.